உலக செய்திகள்

சீனாவில் ஜனநாயக ஆட்சியை கொண்டு வரப்போவதாக கூறி நிதி திரட்டிய தொழிலதிபர் - அமெரிக்காவில் கைது

தொழிலதிபர் குவோ வெங்குய்க்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேன்ஹாட்டன் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பீஜிங்,

சீனாவில் ஜனநாயக ஆட்சியை கொண்டு வரப்போவதாக கூறி நிதி திரட்டி, அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த தொழிலதிபருக்கு அமெரிக்க கோர்ட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவில் தஞ்சம்

சீனாவிவைச் சேர்ந்த தொழிலதிபரும், கோடீஸ்வரருமான குவோ வெங்குய், சீன அரசுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். அங்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர விமர்சகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

நிதி திரட்டி சொகுசு வாழ்க்கை

மேலும், சீனாவில் ஜனநாயகத்தை கொண்டு வரப்போவதாகக் கூறி, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து நூதன முறையில் நிதி திரட்டினார். ஆனால், அவர்கள் கொடுத்த பணத்தை வைத்து நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் சொகுசு பங்களா, ஆடம்பர படகுகள், பந்தய கார்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை வாங்கி குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

30 ஆண்டுகள் சிறை

இதனால் ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள், அமெரிக்க கோர்ட்டில் வழக்கு கொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த அமெரிக்காவின் மேன்ஹாட்டன் கோர்ட்டு, குவோ வெங்குய் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கில் குவோ வெங்குய்க்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.8 ஆயிரத்து 400 கோடி (889 மில்லியன் டாலர்) இழப்பீடு வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.