ரோம்,
இத்தாலி நாட்டில் உள்ள பள்ளிகளில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான ஆடைகளை(புர்கா மற்றும் நிகாப் போன்றவை) அணிவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்திற்கு அந்நாட்டின் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், சாதாரண ஹிஜாப் அணிவதற்கு இதில் தடை இல்லை.
பாதுகாப்பு, தனிநபர் உரிமைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக இந்த சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டத்தில், பள்ளி வகுப்பறைகளில் இத்தாலிய மொழி தெரியாத அல்லது உள்ளூர் பள்ளிக்கல்வி பின்னணி இல்லாத, இத்தாலிய குடியுரிமை இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையை 30% ஆக கட்டுப்படுத்தும் விதிமுறையும் இடம்பெற்றுள்ளது.
முகத்தை மறைக்கும் விதிமுறையை மீறினால் 200 யூரோ முதல் 1,000 யூரோ(ரூ.1.09 லட்சம்) வரை நிர்வாக ரீதியான அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டத்திற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதை நிரந்தர சட்டமாக மாறுவதற்கு 60 நாட்களுக்குள் இதனை இத்தாலி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.