எட்மாண்டன்,
கனடாவின் ஒரு பகுதியாக ஆல்பர்ட்டா நீடிப்பதா அல்லது பிரிவினை குறித்த கட்டாய பொது வாக்கெடுப்பு நடத்தும் செயல்முறையை தொடங்குவதா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
கனடாவின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டா எண்ணெய் வளம் நிறைந்த பகுதியாகும். இங்கு கடந்த சில ஆண்டுகளாக பிரிவினைவாத உணர்வு மற்றும் தனி நாடு கோரிக்கை அதிகரித்து வருகிறது. இவ்விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி 3 லட்சம் பேர் மனுவில் கையெழுத்திட்டு கவனத்தை ஈர்த்தனர். இதையடுத்து பொது வாக்கெடுப்பு தொடர்பாக அறிவிக்கப்பட்டது.
ஆல்பர்ட்டா மாகாண முதல்-மந்திரியான டேனியல் ஸ்மித், தாம் ஒரு ஒருங்கிணைந்த கனடாவை ஆதரித்தபோதிலும், தனது ஆளும் ஐக்கிய கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள பிரிவினைவாதிகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து இந்த வாக்கெடுப்பை அறிவித்தார். பிரிவினைக்கு 22 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாகக் காட்டும் கருத்துக்கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், இந்த அளவு கூட மிக அதிகம் என்று தெரிவித்தார்.
மாகாண முதல்-மந்திரியின் அறிவிப்பின்படி நேற்று பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆல்பர்ட்டா மக்கள் பிரிவினையை நிராகரித்து, ஒற்றுமைக்கு ஆதரவாகத் தீர்க்கமான வாக்கை அளிக்குமாறு பிரதமர் மார்க் கார்னி கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் மற்றும் அமெரிக்காவுடன் கனடாவை இணைப்பது தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஆல்பர்ட்டாவை சுதந்திரப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய வகையில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு ஒரு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாமதமாக வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டதால், 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த வாக்கெடுப்பானது சுதந்திரம் குறித்த நேரடிப் பொது வாக்கெடுப்பு அல்ல. கனடாவிலேயே நீடிப்பதா அல்லது பிரிவினை குறித்த இரண்டாவது வாக்கெடுப்புக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு சட்டப்பூர்வ செயல்முறையைத் தொடங்குவதா என்பதை முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.