உலக செய்திகள்

தீவிரமடையும் வர்த்தகப்போர்: அமெரிக்க பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதிக்க கனடா முடிவு

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே கனடா மீதான வரிவிதிப்பை டிரம்ப் நடைமுறைப்படுத்தினார்.

ஒட்டாவா,

டிரம்ப் நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

நட்பு நாடுகள்

அமெரிக்காவும், கனடாவும் பல ஆண்டுகளாக பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் துறைகளில் மிக நெருங்கிய நட்பு நாடுகளாகத் திகழ்ந்து வருகின்றன. எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத 8 ஆயிரம் கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இந்த இரு நாடுகளுக்கு இடையே, தினமும் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி (200 கோடி டாலர்) மதிப்பிலான வணிகப் பொருட்களும் தடையின்றி எல்லையை கடந்து சென்று வருகின்றன.

புதிய வர்த்தகக் கொள்கை

இத்தகைய சூழ்நிலையில், டிரம்ப் தனது 2-வது ஆட்சி காலத்தில் அமெரிக்கத் தொழில்களை மேம்படுத்துவதற்காக புதிய வர்த்தகக் கொள்கைகளைக் கையில் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, உலக நாடுகள் பலவற்றின் இறக்குமதிப் பொருட்களுக்கு அவர் கூடுதல் வரிகளை விதித்தார்.

50 சதவீத வரி விதிப்பு

இதற்குப் போட்டியாகக் கனடாவும், சீனாவும் மட்டுமே அமெரிக்காவுக்கு கூடுதல் வரிகளை விதித்துப் பதிலடி கொடுத்தன. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரூ.2 லட்சம் கோடி (2 ஆயிரம் கோடி டாலர்) மதிப்பிலான பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதனால் கனடாவின் ஆண்டு ஏற்றுமதி 5 சதவீதம் அளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வரிவிதிப்பானது கடந்த 19-ந்தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதாக இருந்தது. இந்தநிலையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து வரிவிதிப்பை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

பேச்சுவார்த்தை தோல்வி

இதனிடையே இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே கனடா மீதான வரிவிதிப்பை டிரம்ப் நடைமுறைப்படுத்தினார்.

அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகள் நியாயமற்றவை எனக்கூறி பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு கனடா குழுவை ஒட்டாவாவுக்கு திரும்புமாறு கனடா பிரதமர் மார்க் கார்னி உத்தரவிட்டார்.

மேலும் கனடா மீதான அமெரிக்கா வரிவிதிப்புக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் பரஸ்பரம் 50 சதவீதம் வரிவிதித்து மார்க் கார்னி உத்தரவிட்டார்.