புதுடெல்லி
மேற்காசிய மோதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்கியதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.
இந்த சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இந்திய கொடியுடன் கூடிய இரு கப்பல்களும் கடந்து செல்ல ஈரான் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஈரான், இந்தியா நட்புறவு கொள்கை அடிப்படையிலான இந்த முடிவை தொடர்ந்து, இரு கப்பல்களும் பாதுகாப்பாக இந்தியாவை நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டன.
அந்த கப்பல்களில் 92 ஆயிரத்து 700 டன் எடை கொண்ட எல்.பி.ஜி. எனப்படும் திரவ நிலையிலான பெட்ரோலியம் கியாஸ் உள்ளது. 2 கப்பல்களும் முறையே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்து சேரும் என கூறப்பட்டது. அவை முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்திற்கு நந்தாதேவி கப்பல் வந்தடைந்து உள்ளது. போர் பதற்றம், எரிபொருள் விலையுயர்வு உள்ளிட்ட சூழல்களால், தட்டுப்பாடு நிலவும் நிலையிலுள்ள, அத்தியாவசிய தேவையான கியாஸ் சிலிண்டருக்கான சரக்கு கப்பல் இந்தியாவை வந்தடைந்துள்ளது.
எனினும், இந்திய கொடியுடன் கூடிய 22 கப்பல்கள், மொத்தம் 611 கப்பல் பணியாளர்களுடன் பெர்சிய வளைகுடாவில் உள்ளன. அந்த கப்பல்களில் உள்ள அனைத்து இந்திய பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என அரசு உறுதி கூறியுள்ளது.