உலக செய்திகள்

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய கோரிக்கையை முன் வைத்த ஈரான்

அமெரிக்காவிடம் வழங்கிய புதிய கோரிக்கையில், மூன்று நிலைகளை ஈரான் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த வாரம் பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே 2-ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

ஈரான் நாட்டைச் சேர்ந்த குழுவினர் இஸ்லாமாபாத்துக்கு சென்றிருந்த நிலையில், அமெரிக்க குழுவினர் பயணத்தை ரத்து செய்ததால், பாகிஸ்தான் மத்தியஸ்த குழுவிடம் புதிய வரைவு திட்டத்தை ஈரான் வழங்கியுள்ளது. அந்த வரைவு திட்டம் தொடர்பான செய்தியை அமெரிக்காவின் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிடம் வழங்கிய புதிய கோரிக்கையில், மூன்று நிலைகளை ஈரான் குறிப்பிட்டுள்ளது. அதில், முதலில் போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டாவது கட்டமாக அமெரிக்க படைகள் பின்வாங்கப்பட்டு, ஹார்முஸ் நீரிணையை திறக்கப்பட்டு, கடல்வழிப் போக்குவரத்து சீர்செய்யப்படும். இது இரண்டும் நடந்தால், இறுதியாக அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம் குறித்து அமெரிக்க குழுவிடம் ஈரான் விவாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத உற்பத்தியை முழுமையாக நிறுத்துவோம் என்று ஈரான் அறிவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் செய்யப்படும் என்று அமெரிக்கா மீண்டும் மீண்டும் தெரிவித்து வரும் சூழலில், ஈரானின் புதிய கோரிக்கையை அமெரிக்கா ஏற்குமா எனத் தெரியவில்லை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

போர் நிறுத்தம் தொடர்பாக முன்னதாக, வேண்டுமென்றால் ஈரான் நேரடியாக எங்களிடமே பேசலாம்.. பாதுகாப்பாக பேசுவதற்கு எங்களிடமும் போன் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசியிருந்த நிலையில், பாகிஸ்தான் மூலமாக இந்த புதிய வரைவு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.