வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
இதனை தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறந்து விடுகிறோம் என அறிவித்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
எனினும், 2-வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனை உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. 2 வார கால போர் நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடைய உள்ள சூழலில், இந்த அமைதி பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறும்போது, ஈரானுடன் சிறந்த ஒப்பந்தம் ஒன்று முடிவில் ஏற்படுத்தப்படும் என்றார். நடந்து வரும் முயற்சிகள் நல்ல பலனை தரும். பதற்றங்கள் அதிகரித்து வரும்போதும், புதிய பேச்சுவார்த்தைகளுக்கான நிச்சயமற்ற நிலை காணப்பட்டபோதும், ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என கூறிய அவர், போர் நிறுத்த நீட்டிப்பு என்பதற்கான சாத்தியம் இல்லை என்று கூறினார். அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தபோதும், ஈரான் அதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.