உலக செய்திகள்

சத்: ராணுவ நிலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 23 வீரர்கள் பலி

ஜேமினா

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சத் நாட்டில் போகோ ஹரம் என்ற கிளர்ச்சியாளர்கள் குழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி செல்லும்.

அண்டை நாடுகளிலும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், லேக் சத் பகுதியில் இருந்த ராணுவ நிலை மீது போகோ ஹரம் குழுவினர் நேற்று பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில், ராணுவ வீரர்கள் 23 பேர் பலியாகி உள்ளனர். தவிர, தாக்குதலில் 26 வீரர்கள் காயமடைந்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. எனினும், பதிலுக்கு வீரர்களும் தாக்குதல் நடத்தினர்.

இது கோழைத்தன தாக்குதல் என ஜனாதிபதி மகமத் இத்ரித் டெபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களை போகோ ஹரம் குழுவினர் படுகொலை செய்துள்ளனர். இவர்களின் பிடியில் இருந்து தப்புவதற்காக, லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து சென்று விட்டனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.