3 வயது சிறுமி 
உலக செய்திகள்

சீனா: 12-வது மாடி ஜன்னலில் தொங்கிய 3 வயது சிறுமி மீட்பு

சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார் மற்றும் பாதுகாப்பு காவலர்கள், சிறுமி ஜன்னலில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பெய்ஜிங்,

சீனாவின் பூஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்பிங் நகரில், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடி ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிக்கொண்டு காற்றில் தொங்கிய 3 வயது சிறுமி, அண்டை வீட்டாரின் சமயோசித செயலால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தனிமையில் இருந்த சிறுமி

சீனாவின் பூஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்பிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் 3 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி அன்று சிறுமியின் தந்தை இரவு பணிக்கு சென்றிருந்தார். இதையடுத்து சிறுமி மற்றும் அவரது தாய் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் சனிக்கிழமை அன்று அதிகாலையில் சிறுமி தூங்குவதால், அவரது தாய் மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார்.

12-வது மாடியின் ஜன்னலில் தொங்கிய சிறுமி

அப்போது திடீரென விழித்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாததால் ஜன்னல் வழியாக வெளியே வர முயன்றுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக ஜன்னலின் பாதுகாப்பு கிரில் கம்பிகளுக்கு இடையே சிறுமியின் தலை மாட்டிக்கொண்டது. உடல் முழுவதும் 12-வது மாடியில் இருந்து வெளியே காற்றில் தொங்கத் தொடங்கியது.

உயிரைக் காத்த பிளாஸ்டிக் சேர்

சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார் மற்றும் பாதுகாப்பு காவலர்கள், ஜன்னலில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, 11-வது மாடியில் (கீழ் தளம்) இருந்த அண்டை வீட்டார் தங்கள் ஜன்னல் வழியாக வெளியே குனிந்து, ஒரு பிளாஸ்டிக் சேர் சிறுமியின் கால்களுக்கு கீழே முட்டுக் கொடுத்து தாங்கிப் பிடித்தனர். இதன் மூலம் சிறுமியின் உடல் எடை தாங்கப்பட்டு, அவர் கீழே விழுவது தடுக்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் அதிரடி மீட்பு

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சிறுமியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, ஜன்னல் கம்பிகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். அண்டை வீட்டாரின் சமயோசித முயற்சியால் சிறுமி எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். நெஞ்சை பதறவைக்கும் இந்த மீட்புப் பணி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அண்டை வீட்டாரின் மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT