பீஜிங்,
சீனாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் ‘ஷென்லாங்’ என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலமானது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து ஆய்வுகளை மேற்கொண்டு, பின்னர் பூமிக்கு திரும்பி வந்து தரையிறங்கக் கூடிய தொழில்நுட்பத்தைக் கொண்டது.
இந்நிலையில், ‘ஷென்லாங்’ விண்கலம் பூமியை சுற்றி வரும்போது அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருளை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பறக்கவிட்டதாக கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத அந்த மர்ம பொருள் தற்போது உலக நாடுகளின் கவனத்தை தூண்டியுள்ளது.
வணிக விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான லியோலேப்ஸ்(LeoLabs) வெளியிட்டுள்ள தகவலின்படி, சீன விண்கலத்தில் இருந்து வெளியான அந்த மர்ம பொருள் கடந்த 22-ந்தேதி பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருவது கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வகங்களும் இந்த மர்ம பொருளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
விண்வெளியில் இவ்வாறு மர்ம பொருட்களை பறக்கவிடுவது சீனாவுக்கு இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு இதே போன்ற ஒரு மர்ம பொருள் சீனாவின் செயற்கைக்கோளில் இருந்து விண்வெளியில் பறக்கவிடப்பட்டது.
இது குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகையில், ஒரு செயற்கைக்கோள் அருகே மற்றொரு சிறிய ஆய்வு கலத்தை பறக்கவிட்டு ஆய்வு மற்றும் சோதனை பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சியை சீனா செய்து வரக்கூடும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே ரஷியாவும் இதே போன்ற சோதனைகளை செய்துள்ளது.
வெறும் ஆய்வுப் பணிகாக மட்டும் சீனா இவ்வாறு செய்கிறதா? அல்லது பிற நாட்டு செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை உளவு பார்க்கவோ, அல்லது தாக்கி அழிக்கவோ சீனா முயற்சிக்கிறதா? என உலக நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.