பீஜிங்,
இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா சிறிய விமானம் ஒன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் சமீபத்தில் ஊடுருவியதாகவும், பின்னர் அது தங்கள் எல்லைக்குள்ளேயே சிக்கிம் பிரிவில் நொறுங்கி விழுந்ததாகவும் சீனா புகார் கூறியுள்ளது. அந்த விமானத்தை சீன எல்லைப்பாதுகாப்பு படையினர் அடையாளம் கண்டு, ஆய்வு செய்ததாக சீனாவின் மேற்கு எல்லைப் பிராந்திய கட்டளைப் பிரிவு கூட்டு ஊழியர்துறை துணைத்தலைவர் சாங் சுய்லி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவுக்கு தூதரக ரீதியிலான கண்டனத்தை பதிவு செய்ததாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் தெரிவித்தார். இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவின் பிராந்திய இறையாண்மையை மீறும் செயல் எனக்கூறிய அவர், இதனால் தாங்கள் மிகுந்த அதிருப்தியடைந்ததாகவும், இதை கடுமையாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் சீனாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
டோக்லாம் விவகாரத்தில் சிக்கிம் எல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நீடித்த போர் பதற்றம் தற்போது தணிந்துள்ள நிலையில், சீனாவின் இந்த குற்றச்சாட்டு மீண்டும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து இந்தியா விளக்கம் அளித்துள்ளது. ராணுவ அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் ஆளில்லா விமானம், இந்திய பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. சிக்கிம் செக்டாரில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்றுவிட்டது. வழக்கமான நடைமுறைப்படி, இதுபற்றி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சீனாவுக்கு தெரியப்படுத்தி, அதை கண்டறியுமாறு கூறினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.