பெய்ஜிங்,
நிலவு ஆய்வுத் திட்டத்தில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ள சீனா, மீண்டும் பயன்படுத்தக்கூடிய லாங் மார்ச்-10 பி ராக்கெட்டின் பூஸ்டரை விண்ணில் ஏவிய பிறகு வெற்றிகரமாக கடலில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. இத்தகைய ராக்கெட் பூஸ்டரை மீட்டெடுக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக வெற்றி பெற்ற இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
சீனா தனது அதிநவீன லாங் மார்ச்-10 பி ராக்கெட்டை ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து நேற்று வெற்றிகரமாக ஏவியது. இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதுடன், அதன் முதல் கட்டப் பகுதியை (பூஸ்டர்) கடலில் பாதுகாப்பாக மீட்டெடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஏவுதலுக்குப் பிறகு சுமார் ஆறு நிமிடங்களில், ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி பூமிக்கு நேராக இறங்கி, கடலில் மிதக்கும் மேடையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
இது, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ப்ளூ ஒரிஜின் நிறுவனங்களின் வெற்றிகரமான முயற்சிகளுக்கு பின், சீனாவும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருப்பதை காட்டுகிறது. பொதுவாக ராக்கெட்டுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஏவுதலின் போது பல பகுதிகள் அழிக்கப்படுவதால் செலவுகள் அதிகரிக்கின்றன.
ஆனால் பூஸ்டர் பகுதியை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி செலவுகளை குறைக்க முடியும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2015ல் பால்கன்-9 ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கியது. தற்போது பால்கன்-9 வருடத்திற்கு சுமார் 150 முறை ஏவப்படுகிறது. அதேபோல், ப்ளூ ஒரிஜின் நிறுவனம் 2025-ல் நியூகிளென் ராக்கெட்டை தரையிறக்கியது.