உலக செய்திகள்

விண்வெளி நிலையம் அமைக்கும் பணிக்காக 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா

விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணிக்காக ஒரு பெண் உள்பட 3 விண்வெளி வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியது.

பீஜிங்,

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹோங்போ ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி சென்ஷு 12' விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு 90 நாட்கள் தங்கியிருந்து விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை செய்து வந்த அவர்கள் 3 பேரும் கடந்த மாதம் 17-ந்தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் விண்வெளி நிலையத்தை அமைக்கும் இறுதி கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு பெண் உள்பட 3 விண்வெளி வீரர்களை சீனா நேற்று விண்ணுக்கு அனுப்பியது. சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள கான்சூ மாகாணத்தின் ஜியுகுவான் ஏவு தளத்தில் இருந்து லாங் மார்ச் 2எப் ராக்கெட் மூலம் சென்ஷு 13' விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் ஜாய் ஜிகாங், யே குவாங்பு மற்றும் வாங் யாப்பிங் ஆகிய 3 பேரும் நேற்று அதிகாலை விண்ணுக்கு புறப்பட்டனர்.

6 மணி நேர பயணத்துக்கு பிறகு சென்ஷு 13' விண்கலம் தியான்ஹே' விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த விண்வெளி வீரர்கள் 3 பேரும் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்து தியான்ஹே' விண்வெளி நிலையத்தின் இறுதி கட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.