உலக செய்திகள்

சீனா: ஆடுகளை மேய்க்க லட்சத்தில் சம்பளம்

ஆடு வளர்ப்பில் முன் அனுபவம் கொண்ட இரு தம்பதிகளை, இந்த 700 பேரில் இருந்து அவர் வேலைக்கு தேர்ந்தெடுத்தார்.

பெய்ஜிங்,

சீனாவை சேர்ந்த ஜுவோ சியாங் என்பவர் மங்கோலிய எல்லையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தனது பண்ணையில் பணிபுரிய ஆடு மேய்க்க ஆட்கள் தேவை என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

3000 ஆடுகள்

கோடைகாலத்தில் தனது பண்ணையிலுள்ள 3,000 ஆடுகளை மேய்ப்பதற்கு ஆட்கள் தேவை என விளம்பரம் ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், 2,000 ஏக்கர் மேல் உள்ள நிலப்பரப்பில் ஆடுகளை பார்த்துக்கொள்ள இரண்டு பேர் தேவை என்றும், குறிப்பாக தம்பதியினர் தேவை என்றும் சியாங் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார்.

குளிர்காலத்தில் அப்பகுதியின் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரிக்கும் குறைவாகவே இருக்கும். அக்காலகட்டத்தில், ஆடுகளுக்கு பண்ணையிலேயே தீவனம் அளித்தல் மற்றும் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.

8000 யுவான்

அந்த விளம்பரத்தில் வேலை செய்யும் ஒரு நபருக்கு 8000 யுவான் வழங்கப்படும். மேலும் அவர்கள் தங்குமிடம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த சம்பளம் இந்திய மதிப்பில் மாதம் ரூ 1 லட்சத்துக்கும் மேல் வரும். இது சீனாவில் உள்ள பெரிய நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாகும்.

இந்த வேலைக்கு 700 பேர் விண்ணப்பித்துள்ளனர் அதில் பெரும்பாலும் படித்த பட்டதாரிகள் அதிகம்.  ஆடு வளர்ப்பில் முன் அனுபவம் கொண்ட இரு தம்பதிகளை, இந்த 700 பேரில் இருந்து அவர் வேலைக்கு தேர்ந்தெடுத்தார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தள பதிவில் வைரலாக பரவி வருகிறது.