பீஜிங்,
சூரியன் நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் மட்டுமல்ல, அள வற்ற ஆற்றலையும் வழங்குகிறது. அந்த ஆற்றலை உருவாக்கும் அணு இணைவு செயல்முறையை பூமியிலேயே செயற்கையாக உருவாக்கி, கார்பன் வெளியேற்றம் இல்லாத தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதே உலக நாடுகளின் நீண்டகால கனவாக உள்ளது. அந்த இலக்கை நோக்கி பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆராய்ச்சியில் தற்போது சீனா முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
சீனா உருவாக்கி வரும் அடுத்த தலைமுறை 'செயற்கை சூரியன்' என்பது 'டோகாமாக்' எனப்படும் வளைய வடிவிலான அணு இணைவு உலையாகும். சுமார் 5,820 டன் எடை கொண்ட இந்த உலையில், ஹைட்ரஜன் ஐசோடோப்புகள் மிக அதிக வெப்பத்தில் சூடாக்கப்பட்டு 'பிளாஸ்மா' என்ற நிலைக்கு மாற்றப்படுகின்றன. பின்னர் அந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது. சூரியனின் மையத்தில் நிகழ்வதைப் போல மிகப்பெரிய அளவில் ஆற்றல் வெளிப்படுகிறது.
அணு இணைவு உலையில் உருவாகும் பிளாஸ்மாவின் வெப்பநிலை 10 கோடி டிகிரி செல்சியசுக்கும் அதிகம் இருக்கும். இந்த அளவுக்கு அதிகமான வெப்பத்தை தற்போதுள்ள எந்த உலோகமும் தாங்க முடியாது. எனவே, பிளாஸ்மா உலையின் சுவர்களை தொடாமல் நடுவில் மிதக்கும் வகையில் மிக வலிமையான காந்தப்புலம் உருவாக்கப்படுகிறது. இதுவே 'காந்தக் கட்டுப்பாடு' எனப்படுகிறது.
சீனா உருவாக்கியுள்ள 582 டன் எடை கொண்ட 'சூப்பர் கண்டக்டிங்' காந்தம், மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நிலையான காந்தப்புலத்தை உருவாக்கி, பிளாஸ்மாவை பாதுகாப்பாக கட்டுப்படுத்தும் பணியைச் செய்யும்.
சூரியனின் மைய வெப்பநிலை சுமார் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் மட்டுமே. ஆனால் பூமியில் அணு இணைவு நிகழ்வை உருவாக்க 10 கோடி டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை தேவைப்படுகிறது. இதற்கு காரணம் சூரியனின் மிகப் பெரிய ஈர்ப்பு விசையாகும். அந்த ஈர்ப்பு விசை அணுக்களை இயற்கையாக ஒன்றிணைக் கிறது. பூமியில் அந்த அளவுக்கு ஈர்ப்பு விசை இல்லாததால், அதற்கு ஈடாக மிக அதிக வெப்பநிலையை உருவாக்க வேண்டிய கட்டாயம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அணு இணைவு தொழில்நுட்பம் தூய்மையான எரிசக்தியின் 'புனிதக் கோப்பை' என்று அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால், கார்பன் வெளியேற்றமின்றி மிகப்பெரிய அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மேலும், தற்போதைய அணு உலைகளுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவான கதிரியக்கக் கழிவுகள் மட்டுமே உருவாகும்.
இதனால் உலகின் எதிர்கால மின்சாரத்தேவையை பூர்த்தி செய்யக்கூடிய புரட்சிகர தொழில்நுட்பமாக அணு இணைவு கருதப்படுகிறது. அந்த இலக்கை நோக்கி சீனா உருவாக்கியுள்ள 582 டன் ராட்சத காந்த அமைப்பு, பூமியிலேயே சூரியனின் சக்தியை உருவாக்கும் மனிதகுலத்தின் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.