பெய்ஜிங்,
சீனாவில் வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ள, வாழக்கைப் பிரநிதிகளை பணியில் அமர்த்தும் வினோத சம்பவம் உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சீனாவில் வேலைக்குச் செல்லும் இளம் தலைமுறையினர் தங்களது வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காக, தங்களுக்கு பதிலாக பணம் கொடுத்து 'வாழ்க்கைப் பிரதிநிதிகளை' வேலைக்கு அமர்த்தும் புதிய கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது. அதிகப்படியான பணிச்சுமை மற்றும் நேரமின்மை காரணமாக இந்த அதிரடி முடிவை இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர்.
இந்த சேவையின் கீழ் நியமிக்கப்படும் நபர்கள், வயதான பெற்றோரின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துத் தருகிறார்கள். மேலும், அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வது, மருந்து மாத்திரைகளை சரியாக கொடுத்து உதவுவது மற்றும் அவர்களுடன் அமர்ந்து பேசி நேரத்தைச் செலவிடுவது போன்ற பணிகளைச் செய்கிறார்கள்.
இது ஒரு புதிய பகுதி நேரத் தொழிலாகவே சீனாவில் உருவெடுத்துள்ளது. இதற்கான கட்டண விவரங்கள்:-
முதியவர்களை நேரில் சந்தித்துப் பேச மற்றும் சமைக்க 2 மணி நேரத்திற்கு சுமார் 300 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.3,500) வரை வசூலிக்கப்படுகிறது. தினமும் வீட்டிற்கு சென்று சமைத்துத் தரும் சேவைக்கு மாதத்திற்கு சுமார் 2,500 யுவான் (ரூ.30,000) வரை கட்டணமாகப் பெறப்படுகிறது.
சீனாவின் முந்தைய ஒற்றைக் குழந்தை கொள்கை காரணமாக, தற்போதுள்ள இளைஞர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டி எனப் பல முதியவர்களைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே நேரத்தில், கடுமையான கார்ப்பரேட் வேலை கலாச்சாரத்திற்கு நடுவே தங்களின் பொருளாதாரத் தேவைகளையும் சமாளிக்க முடியாமல் திணறும் இளைஞர்களுக்கு, இந்த பிரதிநிதி முறை சிறிது தீர்வாக அமைந்துள்ளது.
நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு வழியாக இது பார்க்கப்பட்டாலும், இந்த போக்கு சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவைகள் பெரும்பாலும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத தனிநபர் ஒப்பந்தங்களாக நடப்பதால், ஏமாற்றப்படுவதற்கும் தனியுரிமை மீறல்களுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. பணத்தைக் கொடுத்து பெற்றோருக்கான கடமைகளை செய்யும்போது, குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் உண்மையான பாசமும் உணர்ச்சிகளும் குறைந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.