பெய்ஜிங்,
சீனாவில் பல் வலிக்கு சிகிச்சை பெற வந்த முதியவரிடம் வங்கிப் பணத்தை ஏமாற்றி பறித்ததோடு, 12 பற்களையும் பிடுங்கிய பல் ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சீனாவின் ஷான்சி மாகாணம், பாஒஜி நகரைச் சேர்ந்தவர் லீ (வயது 63) . இந்த முதியவர், அங்குள்ள “டேட்டுவான்யுவான் பல் ஆஸ்பத்திரி” வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்துள்ளார். “காலையில் செயற்கை பல் செட் மாற்றிவிட்டு, மதியமே கறி சாப்பிடலாம்”, “முழு பற்களுடன் 100 வயது வரை வாழலாம்” என்ற ஆஸ்பத்திரியின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி அவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
பல் வலிக்காகச் சென்ற முதியவருக்கு முறையான பரிசோதனைகள் எதையும் செய்யாமல், அவரது வாயில் நல்ல நிலையில் இருந்த 12 பற்களையும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிடுங்கி எறிந்தனர். பின்னர், அவசர அவசரமாக 10 செயற்கை பற்களைப் பொருத்தியுள்ளனர்.
அத்துடன் நிறுத்தாமல், மயக்க நிலையில் இருந்த முதியவரின் மொபைல் போனைப் பயன்படுத்தி, அவரது டிஜிட்டல் பணப்பை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்த 18,800 யுவான் (இந்திய மதிப்புப்படி சுமார் ரூ. 2.6 லட்சம்) பணத்தையும் ஆஸ்பத்திரி நிர்வாகம் திருடியது.
பாதிக்கப்பட்ட முதியவர் லீ, ஏற்கனவே மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர். இத்தகைய நோயாளிகளுக்கு உரிய இதயப் பரிசோதனை இன்றி ஒரே நேரத்தில் 12 பற்களைப் பிடுங்கியது அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின் வாய் முழுவதும் ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவரிடம், வீட்டிற்குச் செல்ல பஸ் கட்டணத்திற்கு வெறும் 30 யுவான் அதாவது ரூ.421 மட்டுமே மீதம் இருந்தது.
இந்த விவகாரம் குறித்து முதியவரின் மகன் அளித்த புகாரின் பேரில், சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஆஸ்பத்திரியில் அதிரடி ஆய்வு நடத்தினர். அங்கு முறையான ஆஸ்பத்திரி பதிவுகள் எதுவும் பராமரிக்கப்படாததும், விதிமீறல்கள் நடந்திருப்பதும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, முதியவரிடம் ஏமாற்றிய முழுப் பணத்தையும் உடனடியாகத் திருப்பித் தர உத்தரவிட்ட அதிகாரிகள், அந்தப் பல் மருத்துவமனையை நிரந்தரமாக மூடி சீல் வைத்தனர். இச்சம்பவம் சீனாவில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.