உலக செய்திகள்

நம்பிக்கையே இந்தியாவின் வலிமையான கரன்சியாக மாறியுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

புதிய இந்திய தூதரகம் ஒன்று மலேசியாவில் விரைவில் திறக்கப்படும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கோலாலம்பூர்,

பிரதமர் மோடி மலேசியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக மலேசியாவுக்கு இன்று சென்று சேர்ந்த அவரை மலேசிய ​​பிரதமர் அன்வர் இப்ராகிம் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். மலேசியாவுக்கு 3-வது முறையாக பிரதமர் மோடி மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

அவர் கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினர் இடையே இன்று பேசினார். அப்போது அவருடைய பெயரை உற்சாகத்துடன் மக்கள் உச்சரித்து, கோஷம் எழுப்பினர். அவர்கள் முன் பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவை முன்பெல்லாம் பெரிய ஒரு சந்தையாக பார்த்தனர்.

ஆனால் தற்போது, முதலீட்டுக்கும், வர்த்தகத்திற்கும் உரிய மையம் ஆக இந்தியா மாறியுள்ளது என்றார். வளர்ச்சிக்கான நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓமன், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா நாடாகட்டும்.

இந்தியாவுடன் அவர்கள் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளனர். நம்பிக்கையே இந்தியாவின் வலிமையான கரன்சியாக மாறியுள்ளது என்று பேசியுள்ளார். புதிய இந்திய தூதரகம் ஒன்று மலேசியாவில் விரைவில் திறக்கப்படும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

இந்த பயணத்தின்போது, மலேசிய ​​பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் ஆலோசனைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, இந்திய சமூகத்தினர் மற்றும் தொழில், வணிக பிரதிநிதிகளுடனும் அவர் உரையாடுவார்.

பிரதமர் மோடியின் மலேசிய பயணத்தின்போது, 10வது இந்தியா-மலேசியா தலைமை செயல் அதிகாரிக்கான கூட்டமும் நடைபெற உள்ளது. இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி மறுஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

SCROLL FOR NEXT