கின்ஷாசா,
காங்கோவில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படகு போக்குவரத்தில் அவ்வப்போது விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு கிவு மாகாணம் இட்ஜிவி தீவில் உள்ள பிவினா நகரில் இருந்து போசா நகருக்கு நேற்று இரவு கிவு ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 50 பேர் பயணித்தனர். படகு கிஷ்கி என்ற கிராமம் அருகே சென்றபோது ஏரியில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் படகில் பயணம் செய்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகினர். படகில் பயணம் செய்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எஞ்சியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.