உலக செய்திகள்

புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மீது ஏறிய காதல் ஜோடி கைது... ஜாமீனில் விடுதலையாகி முத்த மழை பொழிந்தனர்

ஆஞ்சலா-இவான் ஜோடி பாதுகாப்பு கயிறுகள் எதுவும் இன்றி ஆபத்தான முறையில் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மீது ஏறினர்.

வாஷிங்டன்,

ரஷியாவை சேர்ந்த இவான் - ஆஞ்சலா காதல் ஜோடியை, அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஆபத்தான முறையில் ஏறியதற்காக போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 1,454 அடி உயரம் கொண்டது. இந்த கட்டிடத்தின் உச்சிக்கு ரஷியாவைச் சேர்ந்த ஆஞ்சலா மற்றும் இவான் என்ற காதல் ஜோடி பாதுகாப்பு கயிறுகள் எதுவும் இன்றி ஆபத்தான முறையில் ஏறினர்.

மோதிரம் அணிவித்த காதலர்

அங்கு காற்றில் பறந்தபடி உலக அமைதி மற்றும் காதலின் சக்தி குறித்த வாசகம் அடங்கிய கொடி ஒன்றை பறக்கவிட்டனர். பின்னர், அந்த அந்தரத்து உச்சியில் வாலிபர் இவான் முழங்காலிட்டு, தன் காதலியிடம் திருமண விருப்பத்தை கூறி மோதிரம் அணிவித்தார். இதனைப் பார்த்து கீழே நின்ற பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கைது

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நியூயார்க் போலீசார், கட்டிடத்தின் உச்சிக்குச் சென்று அந்த சாகச காதல் ஜோடியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த குற்றங்களுக்காக இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

முத்த மழை

பின்னர் அந்த காதல் ஜோடியை மான்ஹாட்டன் நகர கோர்ட்டில் போலீசார் அஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீனில் வெளிவந்த இவான்-ஆஞ்சலா ஜோடியை பத்திரிகையாளர்கள் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஒருவர், ‘நீங்கள் இப்போது முத்தமிட விரும்புகிறீர்களா?’ என்றார். உடனே இவான்-ஆஞ்சலா ஜோடி அங்கேயே நின்று முத்த மழை பொழியத் தொடங்கினர். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். பின்னர் அந்த காதல் ஜோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.