உலக செய்திகள்

மகுடம் சூடிய ஜோஹெய்ரி மோலா... 44 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகி பட்டம் வென்ற டொமினிகன் குடியரசு

ஜோஹெய்ரி மோலா டொமினிகன் குடியரசின் 2-வது உலக அழகியாகியுள்ளார்.

நஹா ட்ராங்

உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றார்.

2-வது உலக அழகி

73-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் நடைபெற்றது. உலக அழகிப் போட்டி வியட்நாமில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு போட்டியில் 111 போட்டியாளர்கள் பங்கேற்றநிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி 2026-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றார்.

இதன் மூலம் டொமினிகன் குடியரசு 44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக அழகி பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அந்த நாடு இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு மரியாசெலா அல்வரெஸ் மூலம் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தது. இதன் மூலம் ஜோஹெய்ரி மோலா, டொமினிகன் குடியரசின் 2-வது உலக அழகியாகியுள்ளார்.

வெளியேறிய இந்தியா

ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், மலேசியாவின் தானுஷியா செட்டி 2-வது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றனர்.

இந்தியா சார்பில் பங்கேற்ற நிகிதா முதல் 40 இடங்களுக்குள் முன்னேறினார். ஆனால் அவர் முதல் 20 இடங்களுக்குள் தகுதி பெற முடியாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.

கடந்த 2025-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை தாய்லாந்தை சேர்ந்த ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றிருந்தார்.

SCROLL FOR NEXT