உலக செய்திகள்

60 நாட்களுக்கு பின்பு சுங்க கட்டணம்... டிரம்ப் மிரட்டல்

1.7 கோடி பேரல்கள் எண்ணெய்யுடன் 55 வணிக கப்பல்கள் நேற்று நீரிணையை கடந்து சென்றுள்ளன என்றும் கூறினார்.

வாஷிங்டன்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு 5-ல் ஒரு பங்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடிய முக்கிய பகுதியை ஈரான் கைப்பற்றியதுடன், கப்பல்களுக்கு வரி விதிக்கவும் முடிவு செய்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இதனால், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல நாடுகளில் விலைவாசி உயர்வும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வருகிறது. ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்வதற்கான முதல் சுற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இறுதி ஒப்பந்தம்

அவர், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் குவாலிபாப், வெளியுறவு துறை மந்திரி அப்பாஸ் அராக்சி மற்றும் மத்திய வங்கி மற்றும் எண்ணெய் அதிகாரிகளை இன்று சந்தித்து பேசவுள்ளார்.

இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, 60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்பு கொள்ளாவிட்டால், அதன்பின்னர் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா சுங்க கட்டணம் வசூலிக்கும் என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

1.7 கோடி பேரல்கள்

இந்த பணம், மத்திய கிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான சேவைக்காக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். எனினும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து நீரிணை மூடப்பட்டு உள்ளது என ஈரான் தெரிவித்து உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தவறி விட்டது என ஈரானின் ராணுவ தலைமை தெரிவித்தது.

ஆனால், நீரிணை வழியே கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் ஈரான் அதனை கட்டுப்படுத்தவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் கூறினார். இதன்படி, 1.7 கோடி பேரல்கள் எண்ணெய்யுடன் 55 வணிக கப்பல்கள் நேற்று நீரிணையை கடந்து சென்றுள்ளன என்றும் கூறினார்.