துபாய்,
துபாயில் தனது மகள் முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக அவருக்கு பிடித்த மாதிரி சொகுசு காரை உருமாற்றிய பாசக்கார தந்தை செயல் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
துபாயில் வசித்து வரும் தங்க வியாபாரி ஒருவர் தனது மகள் தஹப் மீது மிகுந்த பாசம் வைத்திருந்துள்ளார். தஹப் என்றால் அரபியில் தங்கம் என்றே பொருள் ஆகும். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் புதிய கல்வி ஆண்டுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதில் அந்த பாசக்கார தந்தை முதல் நாள் தனது செல்ல மகளை சொகுசு காரில் சென்று விட நினைத்தார்.
இருந்தாலும் முதல் முதலாக பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மகளுக்காக அந்த நாளை மறக்க முடியாததாக மாற்ற வேண்டும் என விரும்பினார். உடனே அதற்காக தனது 3.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை தனது மகளுக்கு பிடித்தது போல உருமாற்றினார்.
குறிப்பாக பள்ளிக்கூட பஸ் போன்ற அமைப்பு வேண்டும் என மஞ்சள் நிற பெயிண்ட் சேர்த்தார். காரின் மேற்கூரையில் ராட்சத வடிவ பென்சில்கள், ஸ்கேல் போன்ற வடிவமைப்புகளை பொருத்தினார். காரின் பக்க வாட்டில் நோட்டு புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார். முக்கியமாக காரில் தனது அன்பு மகளின் பெயரான தஹப் என்பதை பொறித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் இவர் அமீரகத்தை சேர்ந்தவரா? இல்லை ஈராக் நாட்டை சேர்ந்தவரா? என்ற விவாதம் ஒருபுறம் இருக்க மகளுக்காக பாசக்கார தந்தை செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் 'என்னப்பா சொகுசு காருக்கு வந்த சோதனை, இதுக்கு பேசாமல் ஒரு பிக் அப் வேனை வாங்கி பெயிண்ட் அடிச்சிருக்கலாம்' எனவும் நாளைக்கு காலேஜ் போகும்போது ஹெலிகாப்டரை மாத்துவாரோ? என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் அந்த குட்டி சிறுமி தஹப் உலகில் விலையுயர்ந்த ஆடம்பர காரில் தனக்கு பிடித்த மாற்றங்களுடன் சென்றதை மறக்கமாட்டார்.