உலக செய்திகள்

தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

கேமரூன் எல்லைக்கு அருகிலுள்ள ஜாம்போயே என்ற கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள ஜாம்போயே கிராமத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த கடந்த 18-ம் தேதி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெரிய மண் குவியல் பொள பொளவென சரிந்து விழுந்தது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்டனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சுரங்கங்களில் பணியாற்றி தங்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்ற இளம் ஆண்களும் பெண்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சிறிய அளவிலான தங்கம் மற்றும் கனிம அகழ்வுத் தொழில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. எனினும், போதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாததால் இதுபோன்ற சுரங்க விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.