உலக செய்திகள்

பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை; சட்டத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்

பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா, நெசட் எனப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

டெல் அவிவ்

இஸ்ரேலுக்கு எதிராக 2023-ம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தி பலரை கொன்றது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, அவர்களை மீட்கும் முயற்சியாகவும், பயங்கரவாத அமைப்பை அழிக்கும் முயற்சியாகவும் காசா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் தங்களுடைய வீடுகளை விட்டு பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். 2 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் தொடர்ந்தது. இதன்பின்னர், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா, நெசட் எனப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 62-47 என்ற கணக்கில் ஆதரவு வாக்குகள் கிடைத்தன. சட்ட மசோதாவுக்கு இஸ்ரேலின் வலதுசாரி தேசிய பாதுகாப்பு மந்திரி இதமர் பென் குவிர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால், இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி, மேற்கு கரையில் இருக்க கூடிய நபர்கள் இஸ்ரேல் நாட்டினரை படுகொலை செய்கிறார் என்றால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். அந்த தண்டனை 90 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும். சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே ஆயுள் தண்டனையை நீதிபதி விதிக்க முடியும்.

இதுபற்றி மந்திரி குவிர் கூறும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்த நாள். நம்முடைய எதிரிகளுக்கு துயரம் நிறைந்த நாள். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு தெளிவான முடிவு. பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுப்பவர்கள் மரண பாதையை தேர்ந்தெடுக்கின்றனர் என கூறினார். இஸ்ரேலில் மரண தண்டனை மிக அரிய நிகழ்வாக இருந்த சூழலில், இந்த சட்ட நிறைவேற்றம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.