உலக செய்திகள்

இந்தோனேசியாவில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு

மாயமான 34 தொழிலாளர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் பிரபல மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 34 தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

மிட்டாய் தொழிற்சாலை

இந்தோனேசியாவின் பான்டென் மாகாணம் சிகாண்டே பகுதியில் 'யுனை டெட் பேமிலி புட்' நிறுவனத்துக்குச் சொந்தமான 'பி.டி. பொனுசா அகுங்முலியா' என்ற பிரபல மிட்டாய் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பிரபலமான 'மில்கிடா' மிட்டாய் மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்தத் தொழிற்சாலையில் சுமார் 300 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழிற்சாலையின் ஒரு கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கட்டிடம் முழுவதும் மளமளவெனப் பரவியதால், உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

தீ விபத்து

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர். எனினும் இந்த தீ விபத்தில் 3 பேர் பலியாகி இருந்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் பலர் 90 சதவீத அளவில் தீக்காயம் அடைந்திருந்தனர்.

24 பேர் பலி

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. தீயின் தீவிரத்தால் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளதால், உறவினர்களிடம் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போலீஸ் ஆஸ்பத்திரியில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்குப் பல வாரங்கள் ஆகலாம் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். தீயில் சிக்கியவர்களில் 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் களில் 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாயமான 34 தொழிலாளர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மின்கசிவு காரணம்

எரிந்த கட்டிடம் மிகவும் பலவீனமாக இருப்பதாலும், ஆங்காங்கே இன்னும் புகை மூட்டம் இருப்பதாலும் மீட்புப் பணியில் சவால் நீடிப்பதாக மீட்புக் குழுத் தலைவர் அல்அம்ராத் தெரிவித்துள்ளார். குளிரூட்டும் (ஏ.சி.) சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த பகுதி போதிய வெளியேறும் வழிகள் இல்லாமல் மிகவும் குறுகலாக இருந்ததாக உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனிதவளத்துறை மந்திரி யாசியர்லி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT