மணிலா,
தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணங்களை நேற்று உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவாகியது. நில அதிர்வு ஏற்பட்ட அடுத்த சில நொடிகளில், பல சிறிய கட்டிடங்களும் குடியிருப்புகளும் சீட் டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வீதிகளிலும் திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தின் கோர தாக்கத்தால், தெற்குப்பகுதியின் சரங்கானி மாகாணத்தில் உள்ள கிளான் என்ற மலைக்கிராமத்தில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மலையிலிருந்து சரிந்து விழுந்த டன் கணக்கிலான பாறைகளும் மண்ணும் சுற்றியிருந்த கிராமத்து வீடுகளின் மீது விழுந்து அப்படியே மூடின. இதுகுறித்து அப்பகுதியின் பேரிடர் மேலாண்மை அதிகாரி ரெனேபுன்சலான் கூறுகையில், "மலைப்பாங்கான கிளான் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மட்டும் 13 கிராம மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர, சரங்கானி மாகாணத்தின் பிற பகுதிகளில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஒரே மாகாணத்தில் மட்டும் பலிஎண் ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது” என்றார். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பலி எண்ணிக்கை 35-ஐ எட்டியுள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கின. இந்த கடலலைகளின் தாக்கம் அண்டை நாடுகளான இந்தோனேசியா, பலாவ் தீவுகள் மற்றும் மிகத் தொலைவில் உள்ள தெற்கு ஜப்பான் வரை உணரப்பட்டது.
அங்குள்ள கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழும்பியதால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார இணைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் முற்றிலும் துண் டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன. நிலநடுக்கம் பாதித்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் விழுந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
அரசாங்கம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட மலைக்கிராமங்களில் இன்னும் ஏராளமானோர் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.