சென்னை,
அமெரிக்கன் ஹார்ட்போர்டு கோல்டு தலைவர் மேக்ஸ் பேக்கர் அமெரிக்காவில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது தங்கம் விலை மீண்டும் உயரும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வட்டி விகிதங்கள், பணவீக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் பங்குகளின் தற்காலிக வளர்ச்சி ஆகியவற்றைக் காரணம் காட்டி, தங்கத்தின் விலை தற்காலிகமாகச் சற்று சரிவடையும் அல்லது கட்டுக்குள் இருக்கும் என சில பொருளாதார நிபுணர்கள் கணித்தனர். இது தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் தரக்கூடிய செய்தியாக இருந்த நேரத்தில் அமெரிக்கன் ஹார்ட்போர்டு கோல்டு (அமெரிக்காவின் தங்க முதலீட்டு நிறுவனம்) தலைவர் மேக்ஸ் பேக்கர் அமெரிக்காவில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது தங்கம் விலை மீண்டும் உயரும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- கடந்த ஓராண்டில் தங்கம் மற்றும் வெள்ளி மிகச்சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளன. அதாவது சுமார் 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. சந்தையில் இடையே சிறிய விலை சரிவுகள் ஏற்பட்டாலும், இந்த வளர்ச்சி மற்றும் வேகம் இன்னும் முடியவில்லை.'வால் ஸ்ட்ரீட்டின்' முன்னணி நிதி நிறுவனங்களான ஜே.பி.மோர்கன் மற்றும் வெல்ஸ் பார்கோ ஆகியவை ஒரு அவுன்ஸ் தங்கம் (31.1 கிராம்) 6,300 அமெரிக்க டாலர் வரை உயர வாய்ப்புள்ளது என்ற கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
எனவே கடந்த ஆண்டின் (2025) தங்கம், வெள்ளி விலை உயர்வை போலவே, இந்த ஆண்டும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல், கடன் நெருக்கடிகளுக்கு இடையே முதலீட்டாளர்களின் சொத்துக்களை பாதுகாக்கும் பாதுகாப்பான முதலீடாக தங்கம் தொடர்ந்து தனது வலிமையை நிரூபித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.