ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டுத்தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருவதால் மத்திய கிழக்கில் தீவிர போர்ப்பதற்றம் நீடிக்கிறது.ஈரானை நேரடியாக தாக்கி வரும் அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டு கடற்படை கப்பல்களையும் தாக்கி அழித்து வருகின்றன. இந்த நிலையில் ஈரானின் கடற்படை கப்பலான ‘ஐரிஸ் டெனா’ நேற்று அதிகாலையில் இலங்கை தெற்கு கடற்பகுதியில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தது.அப்போது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரான் கடற்படை கப்பலை தாக்கியது. இதில் ஈரான் போர்க்கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்த கப்பலில் 180 பேர் இருந்ததாக தெரிகிறது.
தாக்குதல் நடந்ததும் அந்த கப்பலில் இருந்து இலங்கை கடற்படைக்கு அவசர கால அழைப்பு அனுப்பப்பட்டது. அதன்பேரில் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அங்கு விரைந்து சென்றனர். மேலும் விமானப்படை விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. கப்பலில் இருந்த 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் கடற்படை கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்தது. சர்வதேச கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எதிரி நாட்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்று தெரிவித்தது.இலங்கை கடற்பகுதியில் ஈரான் நாட்டு போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கப்பல் சமீபத்தில் இந்தியாவுடன் நடந்த கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்றிருந்தது. அதை முடித்துக்கொண்டு புறப்பட்டபோது இந்த துயரம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்ற மற்றும் ஜோடிக்கப்பட்டவை” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.