உலக செய்திகள்

ரஷியா உடன் டீசல் ஒப்பந்தம்: அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு நெருக்கடி

எரிசக்தி நெருக்கடியைப் போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

வாஷிங்டன்,

ரஷியா உடன் அமெரிக்கா டீசல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் டிரம்பின் முடிவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இரட்டை நிலைப்பாடு

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடனான ரஷியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க முயன்ற அமெரிக்காவே, தற்போது ரஷியாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்யத் துணிந்துள்ளது. இதற்கான சிறப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி, முதற்கட்டமாக 3 லட்சம் டன் டீசல் உடனடியாகவும், நவம்பரில் 5 லட்சம் டன்னும், அதைத்தொடர்ந்து 10 லட்சம் டன்னும் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தித் திறனைப் பொறுத்து, குறுகிய காலத்திற்குள் கூடுதலாக 30 லட்சம் டன் டீசலை வழங்க ரஷியா சம்மதித்துள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு

இதற்கு உக்ரைன் அரசு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்திலும் டிரம்பின் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உக்ரைன் மீதான ராணுவத் தாக்குதலை ரஷியா முழுமையாக நிறுத்தும் வரை, அந்த நாட்டின் எரிசக்தி இறக்குமதிக்குத் தடை விதித்து 2022-ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த அமெரிக்க பெடரல் சட்டத்தை டிரம்பின் முடிவு நேரடியாக மீறுவதாக எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டிரம்ப் எடுத்த முடிவின் சட்டப்பூர்வத் தன்மையைச் செனட்சபை உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டிரம்ப் நிர்வாகம் இந்த டீசல் இறக்குமதித் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருகட்சிகளையும் சேர்ந்த முக்கிய செனட்டர்கள் (எம்.பி.க்கள்) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த திட்டத்துக்கு எதிராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜீன் ஷாஹீன், ரிச்சர்ட் ப்ளூமெண்டல், ரான் வைடன் ஆகியோருடன், ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சூசன் காலின்ஸ், லிசா முர்கோவ்ஸ்கி, தோம் டில் லிஸ் ஆகியோரும் கைகோர்த்து டிரம்ப் அரசுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.

சட்டமீறல்

உக்ரைன் போருக்கு அமெரிக்கப் பணம் நிதியுதவியாகச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே விதிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் இயற்றபட்ட சட்டத்தை டிரம்ப் அப்பட்டமாக மீறி ரஷியாவுக்கு மறைமுக நிதி ஆதாயத்தை ஏற்படுத்துகிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும், அமெரிக்க மக்களின் கடுமையான எரிசக்தி நெருக்கடியைப் போக்கவே அதிபரின் சிறப்பு நிர்வாக அதிகாரத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மற்றும் கருவூலத் துறை மந்திரி ஸ்காட் பெசென்ட் ஆகியோர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT