டைனோசர் 
உலக செய்திகள்

ஏலத்திற்கு வரும் டைனோசர் எலும்புக்கூடு; ரூ.250 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

கேரி கஸ் லிககிங்கை கவுரவிக்கும் விதமாக டைனோசருக்கு அவரின் பெயரே “கஸ் டி-ரெக்ஸ்” எனப் பெயரிடப்பட்டது.

வாசிங்டன்,

அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் எலும்புக்கூடு ஒன்று கோடிக்கணக்கில் ஏலத்திற்கு போகும் என எதிபார்க்கப்படுகிறது.

கேரியின் நிலம்

அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் உள்ள ஹார்டிங் கவுண்டியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் ஹெல் க்ரீக் பாறை அடுக்குகள் அமைந்துள்ளன. இந்த நிலத்தின் உரிமையாளர் கேரி கஸ் லிக்கிங். இவருக்கு தனது நிலத்தின் வரலாற்றின் மீது எப்போதுமே ஆழ்ந்த ஆர்வமும் பிணைப்பும் இருந்தது.

பல ஆண்டுகளாக அந்தப் பண்ணையில் பற்களையும் சிறிய எலும்புத் துண்டுகளையும் கண்டெடுத்த பிறகு, பூமிக்கு அடியில் உண்மையான அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ஏதோ ஒன்று இருப்பதற்கான சாத்தியத்தை அவர் உணர்ந்தார்.

தேடும் பணியும், கேரியின் மறைவும்

எனவே அவர் தொல்லியல் வல்லுநரான ஹெய்ட்கேம்ப் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்தார். மேலும், அவர்கள் அந்தப் பண்ணையில் கடந்த 2021-ம் ஆண்டில் புதைபடிவங்களைத் தேடும் கடினமான பணியைத் தொடங்கினர்.

தனது நிலத்துடன் இயல்பாகவே இணைந்திருந்த கேரி, 6500 ஏக்கர் பரப்பளவுள்ள அந்த நிலத்தில் தாமஸ் மற்றும் அவரது குழுவினர் தேடுவதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுட்டிக்காட்டினார். அவர்கள் இந்த பணி தொடங்கிய ஓராண்டு காலத்திலேயே கேரி கஸ் காலமடைந்தார்.

பிரமாண்ட டைனோசர் எலும்புக்கூடு

அவர் சுட்டிக்காட்டிய பகுதி மிகச் சரியாக அமைந்தது. அந்த பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சுமார் 38 அடி (11.6 மீட்டர்) நீளமும், ஏறக்குறைய 12.5 அடி (3.8 மீட்டர்) உயரமும் கொண்ட பிரமாண்டமான டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரிலே மிகப்பெரிய மற்றும் மிகவும் முழுமையானவற்றுள் ஒன்றாக இந்த எலும்புக்கூடு திகழ்கிறது.

”கஸ் டி-ரெக்ஸ்”

மேலும் இந்த ஆண்டு (2026) எலும்புகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு முழுமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு தயாரானது. இந்த அற்புதமான கண்டுபிடிப்பு வெளிச்சத்திற்கு வருவதை அவரால் காணவே முடியவில்லை. அவரைக் கவுரவிக்கும் விதமாக டைனோசருக்கு அவரின் பெயரே “கஸ் டி-ரெக்ஸ்” எனப் பெயரிடப்பட்டது.

கோடிக்கணக்கில் ஏலம்

இந்த எலும்புக்கூடு வருகின்ற ஜூலை 14-ந்தேதி மாலை 7.30 மணியளவில் நியூயார்க்கில் சோத்பீஸ் நிறுவனம் முன்னிலையில் ஏலம் விடப்படும். ஏலத்தின் ஆரம்ப விலை 19 லட்சம் அமெரிக்க டாலர்கள் என சோத்பீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த எலும்புக்கூடு மிகவும் பழமை வாய்ந்ததால் 20 லட்சம் முதல் 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் போகலாம் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்திய மதிப்புப்படி ரூ. 250 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.