டோக்கியோ,
ஜப்பான் அரசுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் மறுஆய்வின்போது, பாஸ்மதி அரிசிக்கான கூடுதல் சந்தை வாய்ப்புகளை கோரும் விவகாரத்தை இந்தியா முன்வைக்கும் என்றும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப்பயணமாக ஜப்பான் சென்ற மத்திய மந்திரி பியூஷ் கோயல், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தொழில்துறை பிரதிநிதி ஒருவர் பியூஷ் கோயலிடம், இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசியின் அளவை அதிகரிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பியூஷ் கோயல் கூறியதாவது;-
“ஜப்பானில் அரிசி ஏற்றுமதி மிக முக்கியமான துறையாக இருப்பதால், இது தொடர்பாக ஜப்பான் அரசு அதிகாரிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். ஜப்பான் அரசுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் மறுஆய்வின்போது, இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
பாஸ்மதி அரிசிக்கான கூடுதல் சந்தை வாய்ப்புகளை கோரும் விவகாரத்தை ஜப்பான் அரசிடம் இந்தியா முன்வைக்கும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும். தரமான பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்திய ஏற்றுமதியாளர்கள் தரநிலைகளைப் பூர்த்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.