வாஷிங்டன்,
கடந்த புதனன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா தான் உலகிலேயே தூய வளிமண்டலத்தைக் கொண்டுள்ளதாக கூறி இருந்தார் . ஆனால் அது உண்மையல்ல, இவர் வெளியிட்டிருந்த கருத்து இந்த வருட ஆரம்பத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த வரைபடத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருந்த கருத்தாகும். உலக சுகாதார அமைப்பின் இந்த வரைபடமானது எந்தளவிற்கு உலக மக்கள் மிகச்சிறிய நுண்துகள் கூறுகளுக்கு வெளிக்காட்டப்படுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட வரைபடம்.
ஆனாலும் இந்த நுண்துகள் கூறுகள் மட்டுமே வளி மாசுக்குக் காரணம் எனக் கூறிவிட முடியாது. வரைபடத்தில் 2.5 மைக்குரோனுக்கும் குறைவான பருமனுடைய வளியில் மிதந்து கொண்டிருக்கும் தூசு, துகள்கள் மட்டுமே கருதப்பட்டிருந்தன. இக் கூறுகள் சிலவேளைகளில் "PM 2.5" மாசுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இத்துகள்களை ஒப்பிடுவதானால் இவை மனித முடியினது தடிப்பிலும் 30 மடங்கு சிறியவை. இவற்றின் பருமன் காரணமாக இவை இலகுவாக நுரையீரனுள் கடத்தப்பட்டு சுவாச மற்றும் இதய நோயாளிகளில் பெரிய துர்விளைவை ஏற்படுத்தி விடுகிறது. இது போன்ற "PM 2.5" மாசுக்களுக்கு கடுமையாக வெளிக்காட்டப்படுவதால் நுரையீரலின் தொழிற்பாடு காலப்போக்கில் குறைவடைவதுடன், அது இறப்புக்களுக்கும் கூட வழிவகுக்கலாம். இத் துகள்களை மட்டும் வைத்து அமெரிக்கா தன்னை தூய வளிமண்டலத்தையுடைய நாடாக அறிவித்துவிட முடியாது. உண்மையில் ஓசோன் மண்டல பாதிப்பிற்கு முக்கிய காரணியாகத் திகழ்வதும் அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது."PM 2.5" மாசுக்களின் அடிப்படையில் பார்த்தால் தூய வளிமண்டலத்தைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இந்தப்பட்டியலில் அமெரிக்கா உண்மையில் 7 வது இடத்தையே பெறுகிறது. தூய நகரமாக சுவீடன் முன்னிலை பெறுகிறது.