வாஷிங்டன்,
விமானத்தில் நாய் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட துர்நாற்றத்தைப் பொருட்படுத்தாமல், பயணம் தாமதமாவதை தவிர்ப்பதற்காக பயணிகள் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்திப் பயணித்த விசித்திரமான சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.
அமெரிக்க நாட்டின் நியூயார்க்கின் லா கார்டியா விமான நிலையத்திலிருந்து கடந்த 25-ம் தேதி அன்று சிகாகோ நோக்கிப் புறப்பட டெல்டா ஏர்லைன்ஸ் (Delta Air Lines - Flight 2806) தயாராக இருந்தது. அப்போது விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பாக பயணிகளிடம் வந்த விமானி, "இதற்கு முந்தைய பயணத்தின் போது நாய் ஒன்று விமானத்தின் உள்ளே சிறுநீர் கழித்துவிட்டது.
அதனை முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் விமானம் புறப்படுவதில் பெரும் தாமதம் ஏற்படும். இல்லையென்றால், அந்த துர்நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு நாம் சரியான நேரத்திற்குப் புறப்படலாம்" என்று கூறி பயணிகளுக்கு 2 தேர்வுகளை வழங்கினார்.
தாமதத்தைத் தவிர்த்து, சரியான நேரத்திற்குத் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் கைகளை உயர்த்தலாம் என்று விமானி கூறினார். அப்போது விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் துர்நாற்றத்தை ஏற்கச் சம்மதித்து தங்களது கைகளை உயர்த்தினர். பெரும்பான்மை பயணிகளின் விருப்பப்படி, விமானம் துர்நாற்றத்துடனேயே சிகாகோ நோக்கிப் புறப்பட்டது.
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜெனிபர் காபி என்பவர், விமானத்தில் நடந்த இந்த அசாதாரண வாக்கெடுப்பைத் தனது மொபைலில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "ஜனநாயகம்!" என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து வேகமாக வைரலாகி வருகிறது. விமானப் பயணத்தின் போது செல்லப்பிராணிகளால் ஏற்படும் சுகாதார சிக்கல்கள் குறித்தும், விமான நிறுவனத்தின் இந்த நடவடிக்கை குறித்தும் இணையவாசிகளிடையே விவாதம் எழுந்துள்ளது.