வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கடந்த வாரம் வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இதில், வெள்ளை மாளிகை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மேடையில் இருந்த ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் மேஜைகளின் அடியில் பதுங்கியும், தரையில் படுத்தும் தங்களை பாதுகாத்து கொண்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உயிருடன் பிடிபட்டார். இதனை டிரம்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கோலே தோமஸ் ஆலன் (வயது 31) என தெரிய வந்துள்ளது. சம்பவத்தின்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நாய் ஒன்று, ஆலனின் வருகையை பற்றி இரண்டு முறை எச்சரிக்கை செய்துள்ளது.
சரியான சமயத்தில் அது எச்சரித்தபோதும், அதனை கையாண்ட நபர் பெரிய அளவில் அதில் அக்கறை காட்டவில்லை. ஒருவரும் அதனை கவனிக்காமல் அலட்சியத்துடன் விட்டு விட்டனர். இதனால், அந்த நபர் பெரிய துப்பாக்கியை தூக்கி கொண்டு திடீரென உள்ளே ஓடியபடி, பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை நோக்கி சுட்டு விட்டு டிரம்ப் நிகழ்ச்சிக்குள் நுழைய முயன்றார்.
இந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி உள்ளன. எனினும், பின்னர் அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தி அவரை பின்னர் கைது செய்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் அரசு வழக்கறிஞரான ஜீனைன் பிர்ரோ, 5 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தாக்குதலுக்கு முன்பு ஹில்டன் ஓட்டலில் ஆலன் சுற்றி திரியும் காட்சிகள் உள்ளன.
ஆலன் கலிபோர்னியாவை சேர்ந்தவர். ஜனாதிபதி டிரம்ப்பை படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆலனுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.