உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடல்

டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் விமான நிறுவனங்களின் அறிவுறுத்தலை பின்பற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி,

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் 2 வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு வலுவான பதிலடி கொடுத்து வரும் ஈரான், அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ள அரபு நாடுகளிலும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. பழிவாங்கும் எண்ணத்துடன் அமெரிக்க தளங்களை நோக்கி ஏவுகணைகளையும், டிரோன்களையும் சராமாரியாக ஈரான் அனுப்பி வருகிறது.

இதில் இடைமறித்து அழிக்கும் பணியிலேயே வளைகுடா நாடுகள் தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஈரானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதலை அமீரக விமான பாதுகாப்பு படையினர் இடைமறித்து அழித்து வருகின்றனர்.

நாட்டில் 17-வது நாளான நேற்று தொடர்ந்து ஈரானின் தரப்பில் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் அமீரகத்தின் வானில் பறந்து வந்தன. இதில் நேற்று அதிகாலை துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல் முயற்சி நடந்தது. இதனை அமீரக வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில் எண்ணெய் கிடங்கு மேல் சிதறிய டிரோன் பாகங்களால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 முக்கிய சாலைகள் தற்காலிமாக மூடப்பட்டன. காலை நேரத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, உடனடியாக விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் தற்போது மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாய் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான போக்குவரத்துக்கான வான்பகுதியை மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் விமான நிறுவனங்களின் அறிவுறுத்தலை பின்பற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமீரக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நாட்டில் அனைத்து ராணுவ படைகளும் தயார்படுத்தப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் இடைமறிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை சம்பவங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே தகவல்களை பகிர வேண்டும் என அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.