அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய 23-வது பிபா உலகக் கோப்பை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவில், உலகில் மிகவும் விலையுயர்ந்த இந்தக் கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் தொடரில் கோப்பையை வெல்லும், முனைப்பில் அணிகள் மிகத்தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்தத் தொடரின் 'இ' பிரிவில் ஈக்வடார், ஜெர்மனி அணிகள் இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஈக்வடார் அணி 2-1 என்ற கணக்கில் வலிமைவாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.
இதன் மூலம், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஈக்வடார் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்தநிலையில், உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடாரின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து அதிபர் டேனியல் நோபோவா உத்தரவிட்டுள்ளார்.