வர்த்தக ஒப்பந்தச் சலுகையில் புதிய சிக்கல் ஏற்படுத்தும் வகையில் இங்கிலாந்து ஸ்காட்ச் விஸ்கிக்கு 150 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் ஸ்காட்ச் விஸ்கிக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த 150 சதவீத இறக்குமதி வரி 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வரியை படிப்படியாக 40 சதவீதமாகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இங்கிலாந்தில் இருந்து மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் கலவை செய்து பாட்டிலில் அடைக்கப்படும் ஸ்காட்ச் விஸ்கி நிறுவனங்களுக்குப் புதிய வரிச் சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய சுங்கத்துறை இத்தகைய சரக்குகளை பானங்கள் தயாரிப்பதற்கான கலவை செய்யப்பட்ட மதுபானத் தயாரிப்பு' என்ற வேறு வகைப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த சரக்குகளுக்கு 150 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி மதுபான நிறுவனங்களின் சுமார் 80 முதல் 90 கன்டெய்னர் சரக்குகள் இந்தியத் துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து வரும் இந்த மொத்த சரக்கை 'நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய முழுமையான விஸ்கி' என்று கருதுவதா? அல்லது 'இந்தியாவில் வேறு மதுபானங்களுடன் கலவை செய்வதற்கான மூலப்பொருள்' என்று கருதுவதா என்பதில் தான் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.
இதனிடையே, வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட வரிச் சலுகை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டு அதிகாரிகளும் அவசரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த வரிச்சலுகை முழுமையாக நடைமுறைக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒப்பந்தத்தின்படி ஸ்காட்ச் விஸ்கிக்கான வரி 75 சதவீதமாகக் குறைக்கப்பட்ட போதிலும், பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் விஸ்கிக்கு மட்டுமே அந்தச் சலுகையை வழங்கிவிட்டு, பீப்பாய்களில் மொத்தமாக வரும் சரக்குகளுக்கு பழையபடியே 150 சதவீத வரி விதிக்கப்படுவது இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.