உலக செய்திகள்

ஆற்றைக் கடந்தும் தப்பவில்லை: 14 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தில் 4 பேரை கொன்ற காட்டு யானை!

14 ஆண்டுகள் கழித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு துர்பே யானை ஜகத்பூருக்கு சென்று உள்ளது.

காத்மண்டு,

நேபாள நாட்டில் சிட்வான் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ளது மாடி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சனிச்சரா போட்டே. இவர் குடிசை போட்டு வாழ்ந்த இடம் யானை சென்று வரும் வழித்தடமாம். பாவம் அவருக்கு அது தெரியவில்லை. அந்த கால கட்டத்தில் துர்பே என்ற ஒற்றை முரட்டு காட்டு யானை நேபாளத்தில் அட்டகாசம் செய்து கொண்டு இருந்தது. அடங்க மறுத்த அந்த முரட்டு யானையின் பெயரை கேட்டாளே அலறுவார்கள். 20-க்கும் மேற்பட்டவர்களை அந்த யானை கொன்று இருக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு சனிச்சரா போட்டே வீடு தன் வழியில் இருந்ததை பார்த்த துர்பே யானை வெகுண்டு எழுந்து இருக்கிறது. அதன் கோர தாக்குதலில் சனிச்சரா போட்டேவின் பெற்றோர்கள் புத்திராம் போட்டே-ஜராலி போட்டே இருவரும் அதன் கால்களில் சிக்கி சின்னா பின்னமானார்கள். பெற்றோரை பறிகொடுத்த சனிச்சரா போட்டே யானையின் கோபத்தில் இருந்து தப்பிக்க அந்த இடத்தை காலி செய்வது மட்டும்தான் வழி என்று நினைத்து அங்கிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜகத்பூர் கிராமத்திற்கு ராப்தி ஆற்றை கடந்து மனைவி மகளுடன் சென்றுள்ளார். அந்த பெரிய ஆற்றை கடந்து துர்பே யானை வரப்போவதில்லை என்பது அவரது நம்பிக்கை.

14 ஆண்டுகள் கழித்து தாக்குதல்

இப்படியே ஆண்டுகள் உருண்டு ஓடியது. சனிச்சரா போட்டேயும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் 14 ஆண்டுகள் கழித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு துர்பே யானை ஜகத்பூருக்கு சென்று உள்ளது. சம்பவத்தன்று இரவு போட்டே தங்கி இருந்த வீட்டை கண்டுபிடித்து இருக்கிறது. வீட்டில் சனிச்சரா போட்டே நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டுச் சுவரின் மீது 'டமார் டமார் என்று யாரோ இடிப்பது போன்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்துள்ளார். அதற்குள் அந்த வீட்டின் மண் சுவர் இடிந்து விழவும் ஆவேசத்துடன் நின்று கொண்டு இருந்த துர்பே யானையை பார்த்து மிரண்ட சனிச்சரா போட்டேயும் மற்றவர்களும் வீட்டை விட்டு வெளியே ஓடி இருக்கிறார்கள். ஆனால் யானை விடவில்லை. சனிச்சரா போட்டேயின் மருமகள் ஆஷிகா போட் (25) மற்றும் 4 வயது பேரன் பரத் ஆகிய இருவரையும் மிதித்து கொன்று தனது ஆத்திரத்தை தீர்த்து உள்ளது.

துர்பே யானை

இவ்வளவு பெரிய ஆற்றை கடந்து இவ்வளவு தூரத்தில் குடியேறினால் இனி நமக்கு ஆபத்து இல்லை என்று நினைத்து இருந்த சனிச்சரா போட்டேவின் குடும்பத்தை துர்பே யானை கண்டுபிடித்து போட்டு தள்ளி இருக்கிறது. 14 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை துர்பே யானை கொன்று உள்ளது. எதற்காக இந்த பழி தீர்க்கும் கோபம் என்பது யாருக்கும் புரியவில்லை? ஆனால் துர்பே யானைக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் இடையே என்னமோ இருக்கிறது என்பதுதான் நேபாளத்து மக்களின் பேச்சாக உள்ளது, அதே நேரம் துர்பே யானையை பற்றிய பின்னணி தகவல்களும் அதிச்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

துப்பாக்கிச்சூடு

மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து அரிசி மூட்டைகள், பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துவது இதன் வழக்கம். பலமுறை வனத்துறையினர் இதனை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. இதன் அசைவுகளைக் கணிக்க ரேடியோ காலர் பொருந்தினார்கள். பின்னர் செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவியும் பொருத்தப்பட்டது. கடந்த 2010 முதல் இந்த யானையை கண்காணித்து வருகிறார்கள். அதற்கு கண்காணிப்பு பட்டை ஒன்றையும் பொருத்தினார்கள். ஒருமுறை அது செயல் இழந்து போனதால் மற்றோரு மாற்று பட்டையும் பொறுத்தப்பட்டதாம். 2012-ல் சனிச்சரா போட்டேவின் பெற்றோரை கொன்றதை தொடர்ந்து நேபாள அரசு துர்பே யானையை கட்டுப்படுத்த திட்டமிட்டு 90 வனத்துறை வீர்களை காட்டுக்குள் அனுப்பியது. அவர்களும் தேடி தேடி ஒரு கட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி காட்டுக்குள் விரட்டி இருக்கிறார்கள். ஆனாலும் துர்பே யானை தனது ஆட்டத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.