உலக செய்திகள்

கத்தார் எரிவாயு மையத்தில் வெடி விபத்து: மாயமான 18 பேரை தேடும் பணி தீவிரம்

கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி மையமான ராஸ் லபான் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயமடைந்தனர். மேலும்,18 பேரை காணவில்லை.

ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டை தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றான கத்தார், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கட்டுப்பாடு காரணமாக ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஜலசந்தி மீதான கட்டுப்பாட்டை ஈரான் தளர்த்தியதைத் தொடர்ந்து, ஏற்றுமதி நிலையங்களை மீண்டும் இயக்க கத்தார் நடவடிக்கை எடுத்தது.அந்த பணிகளின் போது, நேற்று இரவு பார்சான் எரிவாயு சப்ளை மையத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ விபத்தாக மாறியுள்ளது. இந்த பயங்கர விபத்தில், 54 பேர் காயமடைந்ததாகவும், 18 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பார்சான் எரிவாயு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 1.4 பில்லியன் ஸ்டாண்டர்டு கனஅடி எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த எரிவாயு, கத்தாரின் மின் உற்பத்தி மற்றும் குடிநீர் உப்புநீக்க நிலையங்களின் செயல்பாட்டிற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.இந்த ஆலையின் பெரும்பங்கு கத்தார் அரசின் வசம் உள்ளது.கடந்த மார்ச் மாதத்தில் ஈரான் ஏவிய ஏவுகணை ராஸ் லபான் பகுதியை தாக்கியதால் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கணிசமான சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.