உலக செய்திகள்

கொலம்பியா: பஸ்சில் குண்டு வெடிப்பு - 13 பேர் பலி

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா.

பொகொடா,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள், ஆயுதக்குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்பட பல்வேறு சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கும்பல்கள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கொலம்பியாவின் கஸ்கா மாகாணம் கஜிபியோ நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 51 பேர் பயணித்தனர். அந்த பஸ்சில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு மறைத்து வைத்துள்ளனர். கஜிபியோ நகர் அருகே சென்றபோது பஸ்சில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கொலம்பியாவில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான தேடப்படும் குற்றவாளி ஈவன் மர்டிஸ்கொ இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பஸ் குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.