வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து மீண்டும் வங்காளதேசத்துக்கு அழைத்து வருவதற்காக அவரை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காளதேச அரசு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.வங்காளதேச சட்டத்துறை மந்திரி முகமது அசாதுஸ்ஸமான் இதுகுறித்து கூறியதாவது:-ஷேக் ஹசீனா எங்களது தீர்ப்பாயத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். அவர் ஒரு குற்றவாளி என்பதுதான் எங்களைப் பொறுத்தவரை அவரது அடையாளம்.
அவரை மீண்டும் வங்காளதேசத்துக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.இந்த விவகாரத்தில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் சட்டப்படியான நடைமுறைகள் பின்பற்றப்படும். ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பது தொடர்பாக இந்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வங்காளதேசத்தின் கோரிக்கையை இந்தியா ஏற்கனவே பெற்றுக்கொண்டதாகவும், அது தொடர்பாக உரிய நடைமுறைகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பது குறித்து இதுவரை இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை.
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்கியதில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக ஷேக் ஹசீனா மீது குற்றம்சாட்டப்பட்டது.இதுதொடர்பாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் ஒரு குற்றச்சாட்டுக்கு மரண தண்டனையும், மற்றொரு குற்றச்சாட்டுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த விசாரணை அவர் ஆஜராகாமலேயே நடைபெற்றது.
இதற்கிடையே, வருகிற டிசம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு திரும்புவேன் என்று ஷேக் ஹசீனா சமீபத்தில் தெரிவித்திருந்தார். சிறை தண்டனை அல்லது மரணத்தை எதிர்கொள்ள நேரிட்டாலும் தாய்நாட்டுக்கு திரும்பும் முடிவில் மாற்றமில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்று வங்காளதேச அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.