உலக செய்திகள்

ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை; பொதுமக்கள் அவதி

வெப்பம் அதிகரித்துள்ளதால் தோல் நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

லண்டன்,

பிரான்ஸ் மட்டுமின்றி இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் வெப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.

வெப்பஅலை

இந்தநிலையில், ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்பஅலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிரான்சில் நேற்று வரலாறு காணாத அளவு அதிகபட்ச வெப்பம் பதிவானது. அந்நாட்டின் தேசிய சராசரி வெப்பம் 29.8 டிகிரி செல்சியஸை எட்டியது. பல இடங்களில் பகல்நேர வெப்பம் 40 டிகிரி செல்சியஸை (104 பாரன்ஹீட்) தாண்டியுள்ள நிலையில், அங்கு வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த வார இறுதியிலிருந்து 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பருவ நிலை

வட ஆப்பிரிக்கா, சஹாரா பாலைவனப் பகுதிகளில் இருந்து வரும் வெப்பக் காற்றால், ஐரோப்பாவில் இந்த 'ஒமேகா பிளாக்' எனப்படும் காற்று நகர்வற்ற தீவிர வெப்ப நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக, உலகளாவிய சராசரியைவிட ஐரோப்பா இருமடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.