நேபாள இமிக்ரேஷன் அலுவலகம் - கோப்புப்படம் 
உலக செய்திகள்

நேபாள பெருவெள்ளம்: உக்ரைனை சேர்ந்த ஆன்மிகப் பயணிகள் 56 பேரின் நிலை என்ன..? திணரும் மீட்புக்குழுவினர்

கடந்த மாதம் நேபாள பகுதியில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

காத்மாண்டு,

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின்போது காணாமல் போன 56 உக்ரேனியர்களின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவரவில்லை. உக்ரேனிய ஆன்மிகப் பயணிகள் எவரும் உயிரிழந்ததாகவோ அல்லது காயமடைந்ததாகவோ உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் இல்லை.

பெரும் சோகம்

சீன - நேபாள எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி, கைலாஷ் யாத்திரை சென்று திரும்பிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 56 ஆன்மிகப் பயணிகள் மாயமாகியுள்ளனர். பேரழிவு ஏற்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், அவர்களை பற்றிய எந்தவொரு துப்புமே கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இமிக்ரேஷன் அலுவலகம்

கடந்த மாதம் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். எல்லையில் நேபாள இமிக்ரேஷன் அலுவலகம் முற்றிலும் அழிந்துவிட்டதால், அவர்கள் நேபாளத்துக்குள் நுழைந்தார்களா அல்லது இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிக்கினார்களா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் மீட்புக்குழுவினர் திணறி வருகின்றனர்.

டி.என்.ஏ. (DNA) மாதிரி

நேற்றைய (செப்டம்பர் 25) நிலவரப்படி, சீனாவில் உள்ள உக்ரைனியத் தூதரகம், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ (DNA) மாதிரிகளைத் தொடர்ந்து சீனத் தரப்பிடம் வழங்கி வருகிறது. அவர்களை கண்டறிந்து அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளையும் உக்ரைனியத் தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT