பெய்ஜிங்,
சீனாவில் நிர்ணயிக்கப்பட்ட வேலை இலக்குகளை முடிக்கவில்லை என்பதற்காக இளம் பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட கொடூரமான உடற்பயிற்சித் தண்டனை, அவரை தீவிர மருத்துவக் கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணம், ஹங்சோ நகரைச் சேர்ந்த இளம் பெண் யாங் (வயது 20). அவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் நிதி ஆலோசகராக சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே, நிறுவன மேலாளர்கள் ஊழியர்களுக்குக் கடினமான தினசரி விற்பனை இலக்குகளை நிர்ணயித்துள்ளனர்.
விற்பனை இலக்குகளை முடிக்கத் தவறும் ஊழியர்களுக்கு, நிறுவனம் 2 கடுமையான விதிகளை விதித்திருந்தது. தவறவிட்ட ஒவ்வொரு இலக்கிற்கும் 50 யுவான் (சுமார் 600 ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும். அல்லது, அதற்குப் பதிலாக 100 முறை உட்கார்ந்து எழுந்து கடுமையான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும்.
பணத்தை இழக்க விரும்பாத யாங், தனது 2 இலக்குகளை தவற விட்டதற்காக 200 முறை உட்கார்ந்து எழுந்து செய்யக்கூடிய உடற்பயிற்சி தண்டனையைத் தேர்வு செய்தார். உடற்பயிற்சிப் பழக்கம் இல்லாத அவர், அலுவலகத்திலேயே சக ஊழியர்கள் முன்னிலையில் 200 முறை உட்கார்ந்து எழுந்து உடற்பயிற்சி செய்து முடித்தார்.
தண்டனை முடிந்து வீட்டிற்குச் சென்ற யாங்கிற்கு அன்றிரவே கடுமையான தசை வலி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் அவரால் கால்களை நகர்த்தவோ, எழுந்து நிற்கவோ கூட முடியவில்லை. மேலும் அவரது சிறுநீர் அடர் தேநீர் நிறத்தில் வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
யாங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு 'ராப்டோமையோலிசிஸ்' என்ற தீவிர தசைச் சிதைவு நோய் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். மிகக் குறுகிய காலத்தில் உடலுக்குத் தாளாத அதிதீவிர உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது தசை நார்ப்பொருட்கள் சிதைந்து, இரத்தத்தில் கலப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.
இது உடனே கவனிக்கப்படாவிட்டால் சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் உயிரிழப்புக்கே வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யாங் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்தச் சம்பவம் சீன சமூக வலைதளங்களில் ஊழியர் சுரண்டல் மற்றும் பணியிட வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது.