சீனாவின் புதிய விண்வெளி நிலையம்
பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் சாவதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்தில் அந்த நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. விண்வெளி துறையில் முதல் இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது.
தியான்ஹே என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து விண்வெளி நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவு பொருள்களுடன் தியான்சோ - 2 என்ற சரக்கு விண்கலத்தை கடந்த மே மாத இறுதியில் சீனா விண்ணுக்கு அனுப்பியது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தியான்ஹே விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங், (வயது 56) லியு போமிங் (54) மற்றும் டாங் ஹோங்போ (45) ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த மாதம் 16-ந் தேதி சென்ஷு 12 விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.
பூமியிலிருந்து 350 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தியான்ஹே விண்வெளி நிலையத்தின் மையப்பகுதியை வெற்றிகரமாக சென்றடைந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விண்வெளியில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள சீன விண்வெளி வீரர்கள் 2 பேர் முதல் முறையாக நேற்று விண்வெளி நடைபயணம் மேற்கொண்டனர்.
விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ரோபோ கையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக லியு போமிங் மற்றும் டாங் ஹோங்போ ஆகிய இருவரும் விண்வெளி நிலையத்தின் மைய பகுதியை விட்டு வெளியே வந்து விண்வெளியில் நடந்தனர். விண்வெளி நடைபயணத்துக்கான பிரத்யேக ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்த இருவரும் ரோபோ கையை பொருத்தும் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.