மணிலா
இந்தோ-பசிபிக்கின் வருங்காலம் போட்டியில் அல்ல, இதுதரப்பின் ஒத்துழைப்பிலேயே உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆசியான் அமைப்பு நடத்தும் 23-வது ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான ஆசியானின் தலைமை பொறுப்பை பிலிப்பைன்ஸ் ஏற்றுள்ள நிலையில், அதன் தலைநகர் மணிலாவில் ஆசியான் மாநாடு இன்று நடந்தது.
இதற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் சென்றார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் தலைவர்களுக்காக பிலிப்பைன் சர்வதேச பாரம்பரிய மையத்தில் நேற்று இரவு விருந்து நடந்தது. இதனை முன்னிட்டு பிலிப்பைன்சின் பாரம்பரிய உடையை அணிந்து பிரதமர் மோடி, இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த பயணத்தின்போது, மணிலா சர்வதேச விமான நிலையத்தில், இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்து, உரையாடினார். அவர்களுடன் கைகுலுக்கி அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.
இதன்பின்னர் நடந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சியை கண்டு களித்ததுடன், ராமாயண மேடை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அதனுடன், பிலிப்பினோ மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்களின் பூர்ண கும்ப சுலோகங்களின் வாசிப்பையும் அவர் அமைதியாக கேட்டு கொண்டார்.
இந்த நிலையில் ஆசியான் மாநாடு இன்று துவங்கியது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது, ஒரு வெளிப்படையான, அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக்கில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தோ-பசிபிக்கின் வருங்காலம் ஆனது, போட்டியில் இல்லாமல், ஒத்துழைப்பிலேயே உள்ளது என்றும் நம்புகிறது என்றார்.
அவர் இதுதொடர்பாக தொடர்ந்து பேசும்போது, ஆசியான் மற்றும் இந்தியா என இரு தரப்பும், இந்த இந்தோ-பசிபிக் பகுதியிலும் இதனை கடந்த பகுதியிலும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் முன்பே கணிக்க கூடிய வகையில் செயல்பட வேண்டும் என்றார். அதற்கேற்ப, இந்தியாவின் கிழக்கு சட்ட கொள்கையானது, இருவழி உறவுகளில் ஒரு புதிய உந்துதலை தரும் என்றும் கூறினார்.
இந்தியாவும், ஆசியான் நாடுகளும் இணைந்து, உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு பிரதிபலிக்கின்றன. அதனாலேயே, நம்முடைய வருங்காலம் போட்டியின் அடிப்படையில் இல்லாமல், ஒத்துழைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். அதற்கான திறன்கள் நம்மிடம் உள்ளன.
நாமிருவரும் தொழில் நுட்பங்களை உபயோகிப்பவர்களாக மட்டும் இல்லாமல், அவற்றை இணைந்து உருவாக்குபவர்களாகவும், அதில், நம்முடைய மக்களை திறமை படைத்தவர்களாக மாற்ற, நாம் இணைந்து பணியாற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.
இந்தியாவின் வளர்ச்சியும், ஆசியானின் வளமும், ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த பிணைப்பை கொண்டவை. ஆசியான் சமூகத்தின் 2045 தொலைநோக்கு திட்டம் மற்றும் விக்சித் பாரத் 2047 ஆகிய நம்முடைய இரு திட்டங்களும், நம்முடைய பகிரப்பட்ட நோக்கங்களை மெய்யாக்க நமக்கு உதவும் என்றார்.
வளர்ந்து வரும் சுற்றுலா துறையுடன், இந்தியா மற்றும் 9 ஆசியான் நாடுகளுக்கு இடையே நேரடி விமான போக்குவரத்து இன்று நடைபெறுவதே, நம்முடைய நெருங்கிய உறவுகளுக்கு மற்றொரு சான்றாக உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் ஒன்றாக கூடி பிரதமர் மோடி புகைப்படமும் எடுத்து கொண்டார்.