வாஷிங்டன்,
ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி நாளில் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு, நியூயார்க் மாநகரமே அச்சமூட்டும் திகில் நகரமாக உருமாறியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாநகரம் முழுவதும் ஹாலோவீன் பண்டிகை இன்று (சனிக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனால் நகரத்தின் பெரும்பாலான வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பூங்காக்கள் விளக்குகள் எரியும் அனிமேஷன் பேய் உருவங்கள், அனிமேட்ரானிக்ஸ் (தானியங்கி) கோமாளிகள், சூனியக்காரிகள் மற்றும் விதவிதமான பூசணிக்காய் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த விசித்திரமான மற்றும் பயமுறுத்தும் அலங்காரங்களைக் கண்டு ரசிப்பதற்காக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு வருகின்றனர்.
இன்று காலை முதலே குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான சூனியக்காரிகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் பேய் உடைகளை அணிந்து, அண்டை வீட்டாரிடம் இனிப்புகள் கேட்கும் "ட்ரிக் ஆர் ட்ரீட்" விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நியூயார்க் நகரின் குடியிருப்பு பகுதிகள் எங்கும் திருவிழா போன்ற சூழல் நிலவுகிறது.
இந்த கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக, உலகப் புகழ்பெற்ற 53-வது கிரீன்விச் வில்லேஜ் ஹாலோவீன் அணிவகுப்பு இன்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. மன்ஹாட்டனின் 6-வது அவென்யூவில், கானல் தெருவில் தொடங்கி வெஸ்ட் 15-வது தெரு வரை இந்த ஊர்வலம் பிரமாண்டமாக அரங்கேறவிருக்கிறது. இதில் ராட்சத பொம்மைகள், நூற்றுக்கணக்கான இசைக்குழுக்கள் மற்றும் விசித்திர ஆடைகள் அணிந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஹாலோவீன் ஆடை அணிந்து வரும் பொதுமக்கள் எவரும் இந்த அணிவகுப்பில் நேரடியாக இணைந்து மார்ச் செய்ய அனுமதிக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். வீதிகளில் நின்று இந்த வேடிக்கை நிகழ்வைக் காண்பதற்கு பார்வையாளர்களுக்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.