தங்கச் சுரங்கம்- மீட்புப் பணி 
உலக செய்திகள்

தங்கச் சுரங்கம் இடிந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இதுபோன்ற உரிமம் பெறாத, ஆபத்தான சுரங்க விபத்துகள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாங்கி,

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், சுமார் 30 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து- உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் நானா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள அப்பா பிராந்தியத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை, தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென்று மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து சுரங்கம் முற்றிலும் இடிந்தது. இந்த விபத்து ஏற்பட்டதில் 30 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

மீட்புப் பணிகள்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், பொதுமக்களுடன் இணைந்து மீட்புப் பணியைத் தொடங்கினர். உயிரிழந்த 30 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் இணைந்து தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் புகார்

பாதுகாப்பற்ற மற்றும் முறையான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பாரம்பரிய சுரங்க முறையில் இங்கு தங்கம் வெட்டியெடுக்கப்பட்டு வந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இதுபோன்ற உரிமம் பெறாத, ஆபத்தான சுரங்க விபத்துகள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.