உலக செய்திகள்

100 கோடி பயனர்களை எட்டிய கூகுள் ஜெமினி - தினசரி 15 கோடி ஏ.ஐ. படங்கள் உருவாக்கப்படுவதாக தகவல்

பயனர்களில் 63 சதவீதம் பேர் குரல் மூலம் ஜெமினியிடம் பேசி தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அறிந்துள்ளனர்.

வாஷிங்டன்,

செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. பிரபல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை, பயனர்களுடன் உரையாடக் கூடிய வகையில் 'ஏ.ஐ. சாட்பாட்' (AI Chatbot) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

இவற்றின் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக பெறுவது மட்டுமின்றி, ஒரு சக மனிதரைப் போல் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு உரையாடுவது, ஆலோசனைகளை வழங்குவது, கருத்து கேட்பது மற்றும் சொல்வது உள்ளிட்ட செயல்பாடுகளையும் இந்த ஏ.ஐ. சாட்பாட் செய்கிறது. மாணவர்களின் வீட்டுப்பாடங்களை எழுதுவது முதல் கம்ப்யூட்டர் புரோகிராம்களை கோடிங் செய்வது வரை பல வேலைகளை ஏ.ஐ. சாட்பாட் செய்து அசத்துகிறது.

அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்டிங் செயலியாக அறிமுகம் செய்யப்பட்ட ‘ஜெமினி’ பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ‘பிராம்ட்’(Prompt) மூலம் விதவிதமான படங்களை உருவாக்கி அசத்துவதில் ஜெமினி தனி இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், கூகுளின் 14-வது தயாரிப்பான ஜெமினி, கூகுள் வரலாற்றிலேயே மிகக் குறைந்த காலத்தில் 100 கோடி பயனர்களை சென்றடைந்தது. பயனர்களில் 63 சதவீதம் பேர் தங்களது கேள்விகளை தட்டச்சு செய்வதற்கு பதிலாக நேரடியாக குரல் மூலம் ஜெமினியிடம் பேசி பதில்களை அறிந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக, ஜெமினி செயலியை பயன்படுத்தி தினசரி 15 கோடிக்கும் அதிகமான ஏ.ஐ. படங்கள் உருவாக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் சாதனங்களில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் ஜெமினியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.